தமிழகம் வெற்றிக் கழகத்தின் தலைவர் கடுமையான பேரிடர் நிலைமையைச் சந்தித்து, தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர், கழகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் சமூக சேவையில் இணைந்து, மக்களுக்கு பாதுகாப்பு, நிவாரணம் மற்றும் உதவி வழங்கும்படி ஊக்குவிக்கிறார். இந்த நிகழ்ச்சி, அரசியல்வாதிகளுக்கு மக்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யும் பொறுப்பை உணர்த்துகின்றது. அவர் கூறியுள்ளதாவது:
“இந்த இயற்கைப் பேரிடர்க் காலத்தில், தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள நம் தமிழக வெற்றிக் கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
கடந்த பல வருடங்களாக நாம் நற்பணி மன்றமாக, மக்கள் இயக்கமாக இருந்தபோது, இயன்ற அளவில் நம் மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்தோம். மக்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்தோம். நம் சேவை உணர்வால் அவர்களோடு உறவாகப் பழகியவர்கள் நாம்.
என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்களாகிய நீங்கள், உண்மையான மக்கள் பணி செய்யும் நேரம் இதுவே என்பதை ஆட்சியாளர்களுக்கும் உணர்த்தி வருகிறீர்கள். அவ்வகையில் இந்தப் பேரிடர் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை, பாதிப்பிற்கு உள்ளான அனைத்து மாவட்டங்களிலும் நீங்கள் களத்தில் நின்று இரவு பகல் பாராமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன். மேலும் வீடு வீடாகச் சென்று குடிநீர், பால், பிஸ்கட், உணவு, ரொட்டி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை வழங்கி வரும் உங்களின் அளப்பரிய பங்களிப்பைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன்.
பல மாவட்டங்களில் வெள்ள நீர் வடியவில்லை. மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இந்தச் சூழ்நிலையில், மேலும் சில மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
எனவே நம் கழகத் தோழர்கள், தங்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்துகொண்ட பிறகே, பேரிடர்ப் பணிகள் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும். பாதிப்பிற்கு உள்ளான அனைத்து மாவட்டங்களிலும், அனைத்துப் பகுதிகளிலும் வெள்ள நீர் முழுவதுமாக வடியும் வரை, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க வேண்டும். நம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாம் அனைவரும் மக்களோடு மக்களாகக் கரம் கோத்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் உங்களைப் பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தலைவர்
தமிழக வெற்றிக் கழகம்.”