தீபாவளி பண்டிகை : நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி இன்று (நவ., 12, ஐப்பசி 26) நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். இப்பண்டிகை வருடம் தோறும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியிலோ அல்லது அமாவாசை தினத்தன்றோ வருகிறது.

தீபாவளி பண்டிகையை ஹிந்துக்கள் மட்டுமில்லாது சமணம், புத்த மதம் மற்றும் சீக்கிய மதத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.

கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை அழித்த நாளாக பெரும்பாலான ஹிந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். வட இந்தியாவில் ஸ்ரீராமபிரான் வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பிய நாளாக இதை கருதுகின்றனர். சமண மதத்தினை சேர்ந்தவர்கள் மகாவீரரின் இறுதி விடுதலை நாளை குறிக்கும் விதமாக இப் பண்டிகையை கொண்டாடுகின்றனர். சீக்கியர்கள் தங்கள் குரு ஹர் கோவிந்த் முகலாய சிறையிலிருந்து விடுதலையான நாளாக தீபாவளியை கொண்டாடுகின்றனர். புத்த மதத்தினர் தீபாவளியன்று செல்வத்தின் தெய்வமாக இருக்கும் லட்சுமியை வழிபடுகின்றனர். வங்காளத்தில் காளி தேவியை வணங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

கங்கா ஸ்நானம்

தீபாவளி பண்டிகையன்று மக்கள் அதிகாலை எழுந்து உச்சந்தலையில் தேங்காய் எண்ணெய் இட்டு வெந்நீரில் குளிக்கின்றனர். இப்புனித நாளில் இவ்வாறு எண்ணெய் தேய்த்து குளித்தால் கங்கை நதியில் குளித்த பலன் கிடைக்கும் என்று ஹிந்து க்களால் நம்பப்படுகிறது.

இறை வழிபாடும் புத்தாடை அணிதலும்

பண்டிகை தினத்தன்று புத்தாடை மற்றும் விதவித இனிப்புகள் பலகாரங்களை பூஜை அறையில் வைத்து கடவுளை மக்கள் வணங்குவார்கள். பின் புத்தாடை அணிந்து கோவில்களுக்கும் சென்று இறைவனை வணங்குவார்கள்.

பட்டாசு வெடித்தல், வாழ்த்துக்கள் பரிமாறுதல்

தீமை அழிந்த நாளை கொண்டாடும் விதமாக தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விதவிதமான பட்டாசுகளை கொளுத்தி மகிழ்வார்கள்.

மக்கள் இந் நன்னாளில் ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர். பிற மதத்தினைச் சேர்ந்த நண்பர்களுக்கும் ஹிந்து மதத்தினைச் சேர்ந்த நண்பர்கள் இனிப்புகள் வழங்கி தங்கள் அன்பினை வெளிப்படுத்துவார்கள்.

இந் நன்னாளில் வாசகர்கள் அனைவருக்கும் தினவிடியல்.காம் ன் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Spread the love

Leave a Reply