மக்களிடம் கொள்ளையடித்தவர்கள் சிறை செல்வார்கள்; பிரதமர் மோடி உறுதி

மக்களிடம் இருந்து கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை உறுதியுடன் தெரிவிக்கிறேன்” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சத்தீஸ்கரில் துர்க் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: என்னை பொறுத்தவரை ஏழைகள் தான் முக்கியம். அவர்களின் சேவகனாக நான் உள்ளேன். ஏழைகளை பிரிக்கவும், ஜாதி என்ற விஷத்தை பரப்பவும் அரசியல் கட்சிகள் சதி செய்கின்றன.

ஏழைகள் சுயமரியாதை பெறுவது, நம்பிக்கையுடன் இருப்பது, வளர்ச்சி அடையவது, வாழ்க்கை தரம் உயர்வது ஆகியவற்றை காங்கிரஸ் வெறுக்கிறது. ஏழைகள் அவர்கள் பின்னால் நிற்க வேண்டும் என நினைக்கிறது. இதனால், அக்கட்சி ஏழைகளை ஏழைகளாக வைத்துள்ளது. இதனால், ஏழைகளுக்காக மத்திய அரசின் பணிகளை தடுத்து நிறுத்த காங்கிரஸ் விரும்புகிறது.

இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பிரதமர் மற்றும் அச்சமூகத்தினரை காங்கிரஸ் விமர்சிக்கிறது. மோடியை காங்கிரஸ் இரவு பகல் பாராமல் விமர்சனம் செய்கிறது. தற்போது, இம்மாநில முதல்வரும், விசாரணை அமைப்புகளை விமர்சிக்க துவங்கி உள்ளார். விமர்சனங்களை கண்டு மோடி பயப்படவில்லை. ஊழலை ஒழிக்கவே என்னை நீங்கள் டில்லிக்கு அனுப்பினீர்கள்.

ஊழல் செய்து தனது கருவூலத்தை நிரப்பும் பணிக்கு மட்டும் காங்கிரஸ் முன்னுரிமை அளிக்கிறது.உங்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் எந்த வாய்ப்பையும் காங்கிரஸ் தவறவிடவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் சோதனை நடந்தது. அதில் ஏராளமான பணம் சிக்கியது.

இந்த பணம் சூதாட்டக்காரர்களுக்கு சொந்தம் என தெரியவந்துள்ளது. இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கொண்டு காங்கிரஸ் தனது பைகளை நிரப்பி வருகிறது. சூதாட்ட பணத்திற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இதன் பின்னணியில் உள்ளவர்களை துபாயில் சந்தித்தது ஏன் என மாநில அரசும், முதல்வரும் மக்களிடம் கூற வேண்டும். இந்த பணம் கைப்பற்றிய பிறகு முதல்வர் களத்திற்கு வருகிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பணத்தை சுரண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஊழலின் மூலம் உங்களின் நம்பிக்கையை இம்மாநில அரசு தகர்த்து விட்டது. பா.ஜ., அரசு அமைந்த பிறகு, ஊழல் குறித்து விசாரிக்கப்பட்டு, உங்களிடம் இருந்து கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு மோடி பேசினார்.

Spread the love

Leave a Reply