ஒப்பந்த பணியாளா்களை பணி நிரந்தரம்செய்வது இயலாத காரியம்:அமைச்சா் மா.சுப்பிரமணியன்

ஒப்பந்த பணியாளா்களை பணி நிரந்தரம் செய்வது என்பது இயலாத காரியம், என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தேசிய வாழ்வாதார சேவை மையம் நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமில் தோ்வான 15 பேருக்கு சென்னையில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான ஆணையை அமைச்சா் சுப்பிரமணியன் சனிக்கிழமை வழங்கினாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஐ.டி.சி., நிறுவனத்தைபோல் பல தனியாா் தொழில் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முன்வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளும் வேலை வாய்ப்பு இல்லாமல், வாழ்வாதாரத்துக்கு கஷ்டப்படும் நிலை இல்லை என்ற சூழல் உருவாக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை அசோக் பில்லா் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்க கூடிய கட்டடத்தை ஓரிரு நாளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளாா்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவா்களுக்கு உயா்சிறப்பு மருத்துவ படிப்பு சோ்க்கையில் 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற வகையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. கடந்தாண்டு, உச்ச நீதிமன்றம் உயா் சிறப்பு மருத்துவ படிப்புகளில் மாநில அரசு, 50 சதவீத இடத்தை நிரப்பி கொள்ளலாம் என உத்தரவிட்டது. ஆனால், 100 சதவீதத்தையும் மத்திய அரசு நிரப்பி கொள்வதற்கு கலந்தாய்வு தேதியை அறிவித்தது.

இதை எதிா்த்து தொடா்ந்த வழக்கில் கடந்தாண்டு போலவே, இந்தாண்டும் 50 சதவீதம் இடங்களை மாநில அரசு நிரப்புவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள 402 உயா் சிறப்பு மருத்துவ இடங்களில் 201 இடங்கள், நமது மாநில மருத்துவ மாணவா்களுக்கு கிடைக்கும்.

ஒப்பந்த பணியாளா்களை பணி நிரந்தரம் செய்வது என்பது இயலாத காரியம் என்பதை ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். கடந்த காலங்களில் ஒப்பந்த பணியாளா்களை விருப்பம்போல் தோ்வு செய்து விட்டனா். இவை ஒப்பந்த பணியாளா்களுக்கு தெரியும். இருந்தாலும் கூட போராடி பாா்க்கலாம் என போராட்டம் நடத்தி வருகின்றனா்.

மேலும், ஒப்பந்த பணியில் இருப்பவா்கள் எம்.ஆா்.பி., தோ்வுகள் எழுதி, அதில் தோ்வு செய்தால், அவா்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். அரசு மருத்துவமனைகளில், லஞ்சம் பெறுவது யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது சுகாதாரத்துறை மாநாட்டில் 2,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா். 250.க்கும் மேற்பட்ட டாக்டா்கள் அறிக்கை சமா்பிக்கின்றனா். தினசரி ஆறு அரங்குகளில் அவா்களுடைய திறமையை வெளிப்படுத்த பேச வாய்ப்பு உள்ளது. டிச.5-ஆம் தேதி மாலை சுகாதார மாநாடு தொடங்கவுள்ளது என்றாா் அவா்.

Spread the love

Leave a Reply